அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
|கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
திருச்சி,
தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட கூடிய கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சுற்றறிக்கை வழியே தகவல் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடக்கவிருந்த பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கடலூரில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் பெங்கல் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.