செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு
|தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை,
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா சாலை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வண்ணாரப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு, பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை ஏரிகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 80 சதவீதம் ஏரி நிரம்பியுள்ளதால் முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலோசனைக்கு பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக எவ்வளவு நீர் திறக்கப்படும் என தெரியவரும். தற்போதைய நிலவரப்படி, 713 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. நீர் இருப்பு 2,903 டி.எம்.சிஆக உள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 21.18 அடியை எட்டியுள்ளது.