
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம்

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு மதுரை ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சைவ சமயத்தின் மீதும், திருமுறைகள் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர். திருமுறைகளை பாடும் ஓதுவா மூர்த்திகளை எப்போதும் பாராட்டும் வழக்கம் கொண்டவர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி, சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரது முறையற்ற பேச்சு குறித்து தகவலறிந்தவுடன் பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து முதல்-அமைச்சர் நீக்கியது பாராட்டுக்குரியது. மேலும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.
ஒரு சமயத்தை உயர்த்தியும், ஒரு சமயத்தை தாழ்த்தியும் பேசுவது சில அமைச்சர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. ரகசிய காப்பு பிரமாணம் ஏற்ற அமைச்சர்கள் அனைவரும், அனைத்து சமயத்தவருக்கும் பொதுவானவர்களாகவே இருக்க வேண்டும். எனவே, அனைத்து அமைச்சர்களையும் அழைத்து எந்த சமயத்தையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது என முதல்-அமைச்சர் கண்டிக்க வேண்டும்.
திமுகவின் பேச்சாளர்கள் சிலரும் முறையற்ற வகையில் பேசுகின்றனர். அவர்களையும் கண்டித்து எச்சரிக்க வேண்டும். தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கும், பாஜக தலைவராக இருந்து திறம்பட செயல்பட்டு, கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற அண்ணாமலைக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.