< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு

தினத்தந்தி
|
2 Jan 2025 9:41 AM IST

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

இதன்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ம் தேதி) முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஒரேநேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளைமுதல் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர். நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம், டோக்கன் எண் விவரங்கள் அடங்கிய டோக்கன் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் விநியோகம் நாளை தொடங்க உள்ள நிலையில், ரேஷன் பணியாளர்கள், நாளை முதல், கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்க உள்ளனர்.

மேலும் செய்திகள்