< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை: நெல்லையில் களைகட்டும் பனை ஓலை விற்பனை
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: நெல்லையில் களைகட்டும் பனை ஓலை விற்பனை

தினத்தந்தி
|
8 Jan 2025 4:16 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை விற்பனை தொடங்கியது.

நெல்லை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே வாசல் முற்றத்தில் சூரிய பகவானுக்கு உணவு தானியங்களை படைத்து, அடுப்புக்கூட்டி மண்பானையில் அரிசி இட்டு, பனை ஓலைகளை எரித்து பொங்கல் வைப்பது வழிவழி வந்த மரபாகும். பொங்கல் பண்டிகைக்கு இன்னமும் 6 தினங்களே உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் இடுவதற்கான பனை ஓலைகள் விற்பனை களைகட்டி வருகிறது.

பனை மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பனை ஓலைகளை காய வைத்து, பனை தொழிலாளர்கள் முக்கிய இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி, செய்துங்கநல்லூர், திசையன்விளை, இட்டமொழி, முனைஞ்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பனை ஓலைகள் தற்போது நெல்லை சந்திப்பு வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகள், டவுன் ரதவீதிகள், பாளையங்கோட்டை கோபால சுவாமி கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு தனி ஓலை ரூ.30-க்கும், 5 ஓலைகள் சேர்த்து ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, தென்காசி மாவட்டத்தில் தென்காசி அய்யாபுரம், நாலாங்குறிச்சி, கரும்புளியூத்து, மருதமுத்தூர், கடையாலுருட்டி, சேர்ந்தமரம், கோதண்டராமபுரம், வேலப்பாநாடானூர் உள்ளிட்ட இடங்களில் பனை மரங்களில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வரப்படும் பனை ஓலைகள் நெல்லை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பனை ஓலை வியாபாரிகள் கூறுகையில், ''சாதாரண நாட்களில் விவசாய கூலி வேலைக்கு செல்லும் நாங்கள், பொங்கல் பண்டிகை காலத்தில் மட்டும் பனை ஓலைகளை வெட்டி வந்து நகர்புறங்களில் விற்பனை செய்வோம். கடந்தாண்டு ஒரு ஓலை ரூ.20-க்கு விற்றோம். பனை மரத்தில் ஏறி இறங்க போதிய நபர்கள் இல்லை. எனவே கிராமங்களில் கிடைக்கிற ஓலைகளை வெட்டி வந்து ரூ.30-க்கு விற்பனை செய்கிறோம். நெல்லை மாவட்டத்தில் தற்போது வீசி வரும் குளிர்காற்றில் பனை ஓலைகளை காய வைப்பது கஷ்டமாக உள்ளது'' என்றனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் தற்போது பொங்கல் பண்டிகைக்காக மண் அடுப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பாளையங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் பெரிய அடுப்பு ரூ.150-க்கும், சிறிய அடுப்பு எனில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வருவோர் பனை ஓலைகளோடு, மண் அடுப்புகளையும் சேர்த்து கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

மேலும் செய்திகள்