பொங்கல் பண்டிகை: 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்
|சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை,
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 5 ஆயிரத்து 736 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7 ஆயிரத்து 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையில் 5 ஆயிரத்து 290 சிறப்பு பஸ்களும் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 926 பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 216 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சை வழியாக செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் (புறநகர்) இருந்தும், வந்தவாசி போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.