< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

தினத்தந்தி
|
6 Jan 2025 2:03 PM IST

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது.

தொடர் விடுமுறையை அடுத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இதுபற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

மேலும் செய்திகள்