பொள்ளாச்சி சம்பவம்: சட்டசபையில் ஆதாரங்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதில் வருமாறு:-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:- யார் அந்த சார்? என்று கேட்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நாங்கள் பேட்ஜ் அணிந்து வருவதை மலிவான அரசியல் என்று முதல்-அமைச்சர் விமர்சித்தார். 1972-ம் ஆண்டு அவையில் எம்.ஜி.ஆரை பேச விடாமல் தடுத்தது, 1989-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தியது, 2017-ம் ஆண்டு சபாநாயகர் இருக்கையில் ஏறி நடனம் ஆடியது, சபாநாயகர் கையை பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டது ஆகியவைதான் மலிவான அரசியல்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- பொய்யை திரும்ப திரும்பக் கூறி, நீங்கள் தரும் அறிக்கைகளுக்கு நாங்கள் பதிலளிக்காமல் வாய்மூடி இருந்து கொண்டிருக்க முடியாது. அதற்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி:- அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பினால் எதற்காக பதறுகிறீர்கள்? யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தருவோம். இதையே மீண்டும் மீண்டும் நீங்க பேசினால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சினையை தொடங்க வேண்டியிருக்கும்.
எடப்பாடி பழனிசாமி:- அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எப்.ஐ.ஆர். எப்படி கசிந்தது?
சபாநாயகர்:- இந்த பிரச்சினை பற்றி ஏற்கனவே சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவையில் விவாதித்து, பதிலளிக்கப்பட்டுவிட்டது. எனவே அதுபற்றி அதே கூட்டத் தொடரில் மீண்டும் விவாதிக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி:- பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த அடுத்த 24 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளில் மூன்று பேர் உடனே கைது செய்யப்பட்டுவிட்டனர். அந்த சார் ஆட்சியில் அப்படி நடக்கவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. அந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார். குற்றவாளி தி.மு.க.வின் அனுதாபிதான். தி.மு.க.வில் இல்லாதவர். ஆனால் அண்ணாநகர் சம்பவத்தில் சிறுமி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் அ.தி.மு.க. கட்சிக்காரர். அவரை நீங்கள் கட்சியை விட்டு நீக்கினீர்கள். அதை வரவேற்கிறேன். எங்கள் கட்சியில் இல்லாதவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?
எடப்பாடி பழனிசாமி:- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுதான் உண்மை. புகார் கொடுத்தால்தானே அந்த புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கமுடியும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் வந்ததும் எப்.ஐ.ஆர். போடவில்லை. புகார் அளித்த 12 நாட்களுக்கு பிறகுதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி:- 24-2-2019 அன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக வந்து புகார் கொடுக்கிறார். அதனடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்தில் 25-2-2019 அன்று முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். 5-3-2019-ல் அவர் கைது செய்யப்பட்டார். இதுதான் உண்மை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நான் சொல்வதில் எந்த மாற்றமும் கிடையாது. திரும்ப, திரும்ப சொல்கிறேன். 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை நடந்து இருக்கிறது. அதுகுறித்து புகார் அளிக்கவே 2 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. புகார் கொடுத்த பிறகு எப்.ஐ.ஆர்.போடுவதற்கு 12 நாட்கள் ஆகியிருக்கிறது. இதுதான் உண்மை, உண்மை, உண்மை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், நாளைக்கு ஆதாரத்தை நான் சபாநாயகர் அறையில் வந்து கொடுக்கிறேன். அவரும் கொடுக்கட்டும். அதற்கு பிறகு சேர்ந்து முடிவெடுக்கலாம். அதற்குறிய விளக்கத்தை அவர் பெற்றுக்கொள்ளட்டும்.
எடப்பாடி பழனிசாமி:- பொள்ளாச்சி பாலியல் கொடுமை நடைபெறும்போது, புகார் கொடுத்தவுடன் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இதை நீங்கள் சபாநாயகரிடம் நிரூபிக்கவில்லையென்றால், அதற்குரிய தண்டனையை நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் சொல்கிற தண்டனையை நான் ஏற்றுக்கொள்ள தயார். நான், சொன்னதை நிரூபிக்கவில்லையென்றால் நீங்கள் சொல்கிற தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள், சொன்னதை நிரூபிக்கவில்லையென்றால், நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயாரா? 24-2-2019 அன்று புகார் கொடுத்ததாக சொல்கிறீர்கள். எப்.ஐ.ஆர். போட்ட தேதி எப்போது என்று சொல்லவில்லையே? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்தின் போது ஆளும் கட்சி தரப்பினரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சட்டசபையில் சபாநாயகரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விவகாரத்தில், 12 நாட்கள் கழித்துதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சட்டசபையில் முதல்-அமைச்சர் குற்றம்சாட்டி எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருந்த நிலையில், இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொள்ளாச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் அ.தி.மு.க. சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.