"அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழக மருத்துவத்துறையில் 6 ஆயிரத்து 744 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 460 பணியிடங்கள் இதுவரை நிரப்பி இருக்கிறோம். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காலிபணியிடங்கள் குறித்து எதும் தெரியாமல் அறிக்கை விடுகிறார். எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத தலைவராய் சீமான் இருப்பது வருத்தமளிக்கிறது.
2 ஆயிரத்து 353 பணியிடங்களை நிரப்ப 23 ஆயிரத்து 917 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களின் தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி 27-ம் தேதி ஒரே கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வு நடத்திய பிறகு அதில் இருந்து முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
ஐகோர்ட்டின் தீர்ப்பை ஒட்டி சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்னும் கருத்து ஏற்புடையதல்ல. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1,002 டாக்டர்கள் உட்பட செவிலியர்கள் தொடங்கி பாதுகாவலர்கள் வரை 4 ஆயிரத்து 870 பேர் பணியில் உள்ளனர்.
15 ஆயிரம் வரை புறநோயாளிகளாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருகிறார்கள். 2021 ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த எண்ணிக்கையை பாருங்கள். யாரும் யாரையும் பதட்ட படுத்த வேண்டாம். பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் இதுவரை எந்த மருத்துவமனைக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவில்லை. இதுவரை 500க்கும் மேற்பட்ட விருதுகளை சுகாதாரத் துறை பெற்று இருக்கிறது. ஐ.நா. சபையே விருது தந்த இந்த துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கை விட்டிருக்கிறார். டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு இருந்து கொண்டிருக்கிறது. இது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
மற்ற ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு கட்டுபாட்டில் அரசின் நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சித் தலைவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நேரத்தையும் இடத்தையும் நீங்களே குறித்து சொல்லுங்கள். உங்களுடன் எத்தனை பேர் வேணாலும் அழைத்துக் கொண்டு வாருங்கள். உங்கள் முன்னாள் அமைச்சர்களை அழைத்து வாருங்கள்.. நான் தயாராக இருக்கிறேன்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.