மாமல்லபுரத்தில் உடலில் கேமராவுடன் போலீசார் ரோந்து பணி - அத்துமீறும் நபர்களை ஆதாரத்துடன் பிடிக்க நடவடிக்கை
|மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் அத்துமீறும் நபர்களை ஆதாரத்துடன் பிடிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது.
நாள்தோறும் மாமல்லபுரத்திற்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில், உடலில் கேமராக்களை பொருத்தியபடியே போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் பெண்களை கிண்டல் செய்பவர்கள், குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமரா 10 மீட்டர் தூரம் வரை துல்லியமாக வீடியோ எடுக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்த கேமராக்களில் எப்போதும் சார்ஜ் இருப்பதை, ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.