< Back
மாநில செய்திகள்
விஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

விஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
20 Nov 2024 1:21 PM IST

மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. விஷசாராய சாவுகளின் பின்னணியை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் பாமக மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த ஆணையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும்முக்கியமானவை. கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விஷசாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத்தான் இது காட்டுகிறது. விஷசாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷசாராய சாவுகள் தொடர்பாக நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், அந்த துக்க நிகழ்வு நடைபெற்றபோது என்னால் தெரிவிக்கப்பட்டவைதான். இதன் மூலம் இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு மிகவும் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டின் இன்றையத் தீர்ப்பு கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி ஆகும். தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்; இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. இவை அனைத்திற்கும் மேலாக தமிழ் நாட்டிற்கு பெரும் கேடாக உருவெடுத்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்