சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு - உயிர் தப்பிய 145 பயணிகள்
|விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை 11.55 மணிக்கு 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார்.
அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து சரியான நேரத்தில் விமானத்தை விமானி நிறுத்தியதால் 145 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.