அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
|நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் புதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மைதீன். அவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிய சி.சி.டி.வி. பதிவு காட்சிகளின்படி, அப்பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த மசூது என்பவரை வழிமறித்து கால் மற்றும் முதுகில் அதே கும்பல் அரிவாளால் வெட்டி தப்பியோடி இருப்பது தெரியவந்தது. இது குறித்த மைதீன் மற்றும் மசூது கொடுத்த புகாரின் பேரில், பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களை தேடி வந்தனர்.
முதல்கட்டமாக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கி, மின்னல் வேகத்தில் மைதீன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.