< Back
மாநில செய்திகள்
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது

தினத்தந்தி
|
1 Jan 2025 9:47 AM IST

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார். அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55 சதவீதத்தில் இருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. டீசல் மீதான வாட் வரி புதுவையில் 8.65 சதவீதத்தில் இருந்து 11.22 சதவீதமாகவும், காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை புதுச்சேரியில் ரூ.94.26-லிருந்து ரூ.96.26 ஆகவும், காரைக்காலில் ரூ.94.03-லிருந்து ரூ.96.03 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48-லிருந்து ரூ.86.48 ஆகவும், காரைக்காலில் ரூ.84.31-லிருந்து ரூ.86.31 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நடுத்தர, ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்