மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
|தமிழர்களின் வரலாற்றைஅழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். .
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 193 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த இடத்தில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது.
250 பறவையினங்கள், அரியவகை வனவிலங்குகள், 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் என பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாகவும், சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் கல்வெட்டுகள், பழமையான குடவரைக்கோயில்கள் என பண்டைய கால பாரம்பரியத்தை பறைசாற்றும் புராதான சின்னங்களின் அடையாளமாகவும் திகழும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பது பல்லுயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு இனிவரும் காலங்களில் தமிழகத்தில் பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், தமிழர்களின் வரலாற்றையும் அழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.