< Back
மாநில செய்திகள்
திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
24 Dec 2024 10:58 AM IST

பெரியாரை உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெரியாரின் கைத்தடியை தி.க. தலைவர் கி.வீரமணி வழங்கியபோது என்னையே நான் மறந்து விட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை பெற்று இருக்கிறேன்; ஆனால் இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. போதும்..... எனக்கு இது போதும். திராவிட மாடல் என்றால் என்ன என கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். பெரியார் நினைவிடத்திற்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். ஊருக்குள் வர தடை, கோவிலுக்குள் வர தடை, போராட தடை என அனைத்தையும் உடைத்தவர் பெரியார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரின் மனதுக்குள் இடம்பிடித்திருப்பவர் பெரியார். பெரியார் பயணத்தை நாம் தொடர்வோம் என கருணாநிதி சொன்னார். மறைந்து 51 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரியார் பேசப்படுகிறார்.

பெரியாரிடம் கற்றறிந்த பாடத்தை தி.க. தலைவர் கி.வீரமணி வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். பெரியாரின் கருத்துகளை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்து வருபவர் கி.வீரமணி. பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம். பெரியாரின் டிஜிட்டல் நூலகம் எல்லா வகையிலும் அனைவருக்கும் பயன்தரும். வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகமும் திறந்து வைத்து இளைய சமுதாயத்திற்கு பெரியாரை கொண்டு சென்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்