பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடு இல்லை - விஜய் பேச்சு
|பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை என்று விஜய் கூறியுள்ளார்.
விழுப்புரம்,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-
பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம்.
மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பச்சைத் தமிழர் பெருந்தலைவர் காமராஜரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். அடுத்தது எங்கள் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போய்விடுவார்கள். அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். அந்தவகையில் நாம் இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியார், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் இருவரும் நம்முடைய கொள்கைத் தலைவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.