< Back
தமிழக செய்திகள்
பெரியாரா, பிரபாகரனா..? என்று மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் - சீமான்
தமிழக செய்திகள்

பெரியாரா, பிரபாகரனா..? என்று மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் - சீமான்

தினத்தந்தி
|
22 Jan 2025 10:53 AM IST

பெரியார் தொடர்பாக இன்னும் முழுமையாக பேச தொடங்கவில்லை என்று சீமான் தெரிவித்தார்.

சென்னை,

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

இதனிடையே சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை எழுந்திருந்தநிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள். 15 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்..

அந்த புகைப்படம் முதல்முறையாக வெளியான போதே சொல்ல வேண்டியது தானே.. பெரியார் மீது விமர்சனம் வைத்த பின்னர், பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள்.

பெரியாரா, பிரபாகரனா என்று ஆகிவிட்டது..மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான். பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கி.வீரமணியை பதில் சொல்ல சொல்லுங்கள். கொளத்தூர் மணி என்பவர் மதிக்கும் பெரிய மனிதர். நான் நா.த.க. கட்சிப் பெயரை சோ.ராமசாமியையும், குருமூர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்து வாங்கி வந்தேன் என்கிறார்கள்.

பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. நாம் தமிழர் என்ற பெயர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. சோவுக்கும், குருமூர்த்திக்கும் நா.த.க.வுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. நாம் தமிழர் என்ற கட்சிப் பெயரை சோ, குருமூர்த்தி வாங்கி கொடுத்ததற்கான ஆதாரம் என்ன உள்ளது.

வள்ளுவரையும், வள்ளலாரையும் பா.ஜ.க. அபகரிக்க நினைக்கிறது; தி.மு.க. அழிக்க நினைக்கிறது.. அடிக்க இப்போதுதான் கை ஓங்கி இருக்கிறேன்; அதற்குள் அலறினால் எப்படி? என் கருத்து தவறு என்றால்.. பெரியார் கருத்துதான் தவறு.

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழ் சனியன், தமிழில் என்ன இருக்கிறது என்று பேசி இருக்கிறார். என் நிலத்தில் பெரியார் யார்.. நீங்கள் கன்னடன். கர்நாடகா நாட்டில் பிறந்தவர். அவர் என் நிலத்தில் அமர்ந்து தமிழை கொச்சைப்படுத்துவதா..

தமிழன் மட்டும் தான் சூத்திரன் என்று சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறதா.. பெரியார் தொடர்பாக இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை. அதற்குள் அலறுகிறார்கள்.. பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையை சொல்லுங்கள்.

என் மொழியை தாழ்த்திப் பேசுவதற்கு நீங்கள் (பெரியார்) யார்? உங்களுக்கு அதற்கான உரிமையை கொடுத்தது யார்? என் நிலத்தில் வாழும் அனைவருடைய மொழியும் உயர்ந்தது என்றால், என் மொழி தாழ்ந்ததா? அடிப்படையில் என் மொழி முட்டாள்களின் மொழி என்றால்.. உங்களை முட்டாள்களின் தலைவன் என்றுதானே சொல்ல வேண்டும். தமிழர் தலைவன் என்று புத்தகத்தை வெளியிட்டது யார்?. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றால்... உங்களைக் காட்டுமிராண்டி என் தலைவன் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால் இவர்கள் தமிழர் தலைவன் என்று கூறுகிறார்கள்.

பெரியார், 'பெண்களை தாலி அடிமைப்படுத்துகிறது, தாலி அடிமையின் சின்னம் . அதனால் அறுத்து எறியுங்கள்' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு, பொது மேடையில் வைத்து திராவிட கழகம் தாலியை அறுத்தெறியும் பணியை செய்கிறது.

அதே பெரியார்.. 'கர்ப்பப்பையை வெட்டி எறி, நீ பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல. அது உன்னை அடிமைப் படுத்துகிறது' என்று கூறினார்தானே? ஆனால், மேடையில் வைத்து நீங்கள் ஏன் கர்ப்பப்பையை ஒரு இடத்திலும் அறுக்கவில்லை? குறிப்பாக.. அக்கா அருள்மொழியும், கனிமொழியும், அம்மையார் சுந்தரவல்லியும்.. நீங்கள் யாரும் கர்ப்பப்பையை அறுத்து எறியவில்லையே..? குழந்தை பெற்றெடுத்திருக்கிறீர்களே.. எப்படி? இதுதான் நீங்கள் பெரியாரை பின்பற்றுவதா?

பெரியார்தான் அறிஞர் அண்ணாவை படிக்க வைத்தாரா? எங்களைப் படிக்க வைத்தது காமராஜர். குடிக்க வைத்தது திராவிடம். பெரியார் எந்த மதத்திற்கு எதிரான குறியீடு? பெரியாரின் பரிணாம வளர்ச்சிதான் தி.மு.க. பெரியாரின் பெருமைமிக்க பெண்ணியம் குறித்து கொஞ்சம் பேச சொல்லுங்கள். தள்ளாடிக்கொண்டு தளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய அரசியல்.. மோதிக் கொண்டு இருக்காதீர்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அங்கு பதிலளிப்பேன்" என்று சீமான் கூறினார்.

மேலும் செய்திகள்