திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்
|திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை,
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் முதன்முதலாக துணை முதல்-அமைச்சராக இன்றைய தினம் தஞ்சை வந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நான் துணை முதல்-அமைச்சர் ஆகவேண்டும் என்கிற முதல் தீர்மானம் தஞ்சையில் இருந்துதான் வந்தது. ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வருவது இல்லை. ஆனால் இன்று ஏராளமான பெண்கள் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்கள். இதற்கு காரணம் நம் திராவிடம் தான். பெண் அடிமைத்தனத்தை ஒழித்தவர் பெரியார். மகளிர் வளர்ச்சி தான் மாநில வளர்ச்சி என்பார் தலைவர் ஸ்டாலின். அதற்கு ஏற்றார் போலத்தான் பல திட்ட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளனர். அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களே அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என பிரிந்து கிடக்கும் அதிமுகவும், பாஜகவும் எதிர்பார்க்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. நம்முடைய தொடர் வெற்றிதான் எதிரணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்பார் அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
இன்னும் 1.5 ஆண்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. நமது இலக்கு 200 தொகுதி வரவேண்டும் என்பது. அதற்கு ஏற்றார் போல் அனைவரும் செயல்பட வெண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.