திமுக கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்: திருமாவளவன்
|அதிமுகவுக்கு இப்போது நெருக்கடியான காலம் என்று திருமாவளவன் கூறினார்.
ஓசூர்,
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு நிலை மிக மோசமாக உருவாகி விட்டது. வன்முறை தலைவிரித்தாடுகிறது. பிரதமர் மோடி, மணிப்பூருக்கு நேரில் சென்று அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும். அவர் அங்கு உடனடியாக சென்றால் தான் நிலைமை கட்டுக்குள் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை அந்த மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த முறை பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவார்கள்.
அதிமுகவுக்கு இப்போது நெருக்கடியான காலம் தான். அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பா.ஜனதா பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அதிமுகவை தனிமைப்படுத்தினால் தான் மீண்டும் கூட்டணிக்கு வரும் என்று பா.ஜனதா நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. அதிமுக, பா.ஜனதா கூட்டணிக்கு போகுமா? அல்லது மீண்டும் தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளுமா? என்பது அக்கட்சியின் முன்புள்ள பெரிய சவாலாகும்.
தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியை கைப்பற்றும். இந்த கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரி கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக மக்கள், திமுக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்.
போதைப்பொருட்கள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசிய பிரச்சினை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.