தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
|தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தால் நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 172 சிறப்பு பேருந்துகள் என கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு 12 மணி வரை மொத்தம் 10 ஆயிரத்து 784 பேருந்துகளில் மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 358 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,50,510 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக அரசு சார்பில் சுமார் 9 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதனிடையே அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்கள், ரெயில்கள், கார்கள் என மொத்தம் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.