< Back
மாநில செய்திகள்
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்
மாநில செய்திகள்

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
22 Oct 2024 1:50 AM IST

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை புறப்பட சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் தயாரானது. அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தனர்.

அப்போது, 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் இருந்த ஏ.சி எந்திரம் வேலை செய்யவில்லை. தொடர்ந்து புழுக்கம் அதிகரித்ததால் பயணிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. ரெயிலும் புறப்படத் தயாரானது. இதையடுத்து, பயணி ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரெயில் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ஓடிவந்தனர்.

அப்போது, ரெயில்வே அதிகாரிகளுடன், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏ.சி பெட்டி இயங்காதது குறித்து ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் சரிசெய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். பின்னர், உடனடியாக ஏ.சி எந்திரத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, பழுது சரிசெய்யப்பட்டு 55 நிமிடம் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்