பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
|பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்-அமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதல்-அமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.