இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
|காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நவம்பர் 14-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.