"பாம்பன் புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயார்" - தெற்கு ரெயில்வே அதிகாரி
|பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில்வே அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள், பாம்பம் புதிய ரெயில் பாலத்தை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் புதிய பாலத்தில் இன்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கப்பல் செல்வதற்காக தூக்கு பாலத்தை மேலே எழுப்பி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தெற்கு ரெயில்வே அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
"பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரெயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும். பாலத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றார்.