பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி விரைவில் அறிவிப்பு?
|பாம்பன் புதிய பாலத்தில் நேற்று 80 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலத்தில் 3 முறை சரக்கு ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப்பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் பாம்பன் புதிய பாலத்தில் 80 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனரின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி 2 நாட்களாக முகாமிட்டு கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தையும், தூக்குப்பாலத்தையும் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தார். பின்னர் பாம்பன் பாலம் கட்டுமானம் குறித்து அதிகாரிகளிடம் திருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில நாட்களில் அவர் தன் ஆய்வறிக்கையை வழங்க இருக்கிறார். அதற்குள் ரெயில் பாலம் திறப்பு விழா தேதியும் முடிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரெயில்வே துறையினர் மத்தியிலும், ராமேசுவரம் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது.