< Back
மாநில செய்திகள்
பாலாற்றில் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி சென்ற தண்ணீர் - மக்கள் அதிர்ச்சி
மாநில செய்திகள்

பாலாற்றில் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி சென்ற தண்ணீர் - மக்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
25 Dec 2024 8:20 AM IST

பாலாற்றில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி தண்ணீர் சென்றது.

சென்னை,

தமிழக-ஆந்திரா எல்லையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் புயல் காரணமாக சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே பாலாற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் மாராபட்டு பாலாற்றில் நேற்று மழைநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி தண்ணீர் சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாலாற்று தண்ணீரின் தரத்தை சோதித்தனர். இதில் தண்ணீர் கால்நடைகள் கூட குடிக்க முடியாத சூழ்நிலை இருப்பது தெரியவந்தது. சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை பாலாற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதுடன் பாலாற்றில் செல்லும் தண்ணீரை குடித்து கால்நடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

எனவே பாலாறு மாசு ஏற்படுவதை தடுக்க பாலாற்றில் தோல் கழிவு நீரை திறந்துவிடும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்