< Back
மாநில செய்திகள்
அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
6 Nov 2024 5:26 PM IST

அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார். அதன்படி, முதல் முறையாக கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடங்கியுள்ளார்.

2 நாட்கள் கோவையில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் ரூ.158.32 கோடியில் விளாங்குறிச்சி டைடல் பார்க் - தகவல் தொழில் நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் - அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றிக் காட்டிய அதிகாரிகளையும்;

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திக் காட்டி வரும் அதிகாரிகளையும்;மாற்றுத்திறனாளித் தோழர்களுக்காக நமது திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிக அளவிலான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்த்த அதிகாரிகளையும் பாராட்டி ஊக்கமளித்தேன். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்