தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்று ஒட்டுமொத்த திராவிடத்தையும் எதிர்ப்பது குதர்க்கமானது - திருமாவளவன்
|தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி பலவீனமடையும், விரிசல் ஏற்படும் என்பது எல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வேட்கையாக, எதிர்பார்ப்பாக உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சினையின் அடிப்படையில் விவாதம் நடக்கலாம். ஆனால், விரிசல் ஏற்படாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை நான் வழிமொழிகிறேன்.
திராவிடம் வேறு, தமிழர் வேறு என்ற விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாகும். இதைத்தான் கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விரும்புகின்றனர். இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது. அதற்கு துணை போகும் விதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விவாதமும் அமைந்துள்ளது.
பெரியார், அண்ணா போன்றோருக்கு முன்னரே திராவிடம் என்ற கருத்தியலை அரசியலில் பயன்படுத்தியவர் அயோத்திதாச பண்டிதர். தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த திராவிடத்தையும் எதிர்ப்பது குதர்க்கமான விவாதமாகும். திராவிடம் என்பது தேசிய இனமல்ல. அது ஒரு மரபினம். தமிழர் இனம் மரபினம் அல்ல அது ஒரு தேசிய இனம். மக்களை குழப்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.