"இங்கு ஒருவர் மட்டுமே ஆள பிறக்கவில்லை.." - வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா
|தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று வி.சி.க. துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குரல் எழுப்பி உள்ளார்.
மதுரை,
மதுரையில் நடந்த வி.சி.க. நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் பேசிய அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "ஆதிக்க மனப்பான்மையை தூக்கி எறியக்கூடிய அரசியலைத்தான் நாங்கள் உருவாக்குகிறோம். ஆணவப் படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வை, கல்வி நிலையங்களில் இருந்து உருவாக்க வேண்டும். 10 லட்சத்துக்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போது பலர் சமூக ஊடகங்களில் எனது சாதியைக் குறிப்பிடுகின்றனர். எனக்கே என்னுடைய சாதி என்னவென்று தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். கொள்கை, அதிகாரக் கூட்டணி என்றெல்லாம் பேசுகிறார்கள். தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். இங்கு ஒருவர் மட்டுமே ஆளப் பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியலை எங்களால் உருவாக்க முடியும். திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும்.
எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும். ஆதிக்கதை ஒழிப்பதற்கு தான் பொறுமையையும் கல்வியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கோபத்தில் வன்முறைக்கு பதிலாக கையில் பேனா எடுக்க அம்பேத்கர் கற்றுக் கொடுத்திருக்கிறார். கையில் பேனாவுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.