கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆன்லைனில் பொது மாறுதல் கலந்தாய்வு - உயர்கல்வித்துறை திட்டம்
|கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்திட உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வின் மூலம், ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப இடமாற்றம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், ஒவ்வொரு கல்வியாண்டும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வை போலவே, உயர்கல்வித்துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பொது மாறுதல் கலந்தாய்வுகளை 'யுமிஸ்' வழியாக நடத்திடவும் உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.