ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
|அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி
காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், போலீஸ் அதிகாரி வருணும் கடுமையான விமர்சனங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் தலைமை செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது. விசாரணை முடிவதற்கு முன்பே சி.பி.ஐ. விசாரணை கோருவது தேவையற்றது. மணிப்பூரில் இனக்கலவரம் தொடர்கிறது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விரதமிருந்து, காலில் செருப்பு அணியாமல் தன்னைத்தானே வருத்தி அறுபடை கோவில்களுக்கு சென்று வந்தால் நல்லது என ஜோதிடர்கள் அவருக்கு கூறியிருப்பார்கள். அதனை அவர் செய்து வருகிறார். வங்கிகளில் சிபில் ஸ்கோரை கணக்கீடு செய்து கடன் வழங்குவது ஏற்புடையதல்ல. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் இக்குறியீடுகளில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை. முறையீட்டுக்கும் வழியில்லை. இதில் அரசின் பங்களிப்பு என்ன என்பதும் தெரியவில்லை. தற்போது இதுகுறித்து விவாதம் நடைபெற தொடங்கியது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு கூறினார்.