கோவை செல்வராஜ் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
|முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66 வயது) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் அவரது 3-வது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை செல்வராஜ் மறைவுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் கோவை மு. செல்வராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.