'இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை' - எல்.முருகன்
|இந்தி மொழியை திணிப்பதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சியின் 'இந்தி' தின விழா நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றும், இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பா.ஜ.க.வை தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல் சித்தரிக்க தி.மு.க. முயல்கிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது. தமிழகத்தில் பா.ஜ.க. நன்றாக வளர்ந்துள்ளது. இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை. மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளலாம்.
கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது சிறிய தவறு நேர்ந்துள்ளது. தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அந்த தவறுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும்?"
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.