என்.டி.ராமராவ் போல புகழ்பெற்ற அரசியல் தலைவர் உருவாக முடியாது: அண்ணாமலை
|தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தேசிய பார்வை வரவேண்டிய நேரம் இது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
1,300 வருடம் உடைய ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சில நாடுகளில் ஜனநாயகம் 200 முதல் 300 வருடங்களாக இருக்கிறது. எல்லா தேர்தலிலும், எல்லா அரசியல்வாதிகளும் மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்வார்கள். நானும் மாற்றம் வேண்டும் என்று போராடி கொண்டு இருக்கிறேன். 1,300 வருடங்களாக மாறாத விசயத்தை நாம் என்ன மாற்ற போகிறோம் என்பதுதான் முக்கியம்.
தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தேசிய பார்வை வரவேண்டிய நேரம் இது. 60 ஆண்டுகால கட்சிகள் பேசும் அதே இருமொழிக் கொள்கையை புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும் பேசுகிறார்கள். எந்த மொழிக்கும் எந்த மொழி போட்டியில்லை. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு மாணவர்களுக்கு மூன்றாவது மொழிக் கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் என்றுக் கூறினால் அது அகங்காரம்.
எந்த மொழிக்கும் எந்த மொழியம் போட்டியில்லை. இந்தி மொழி மூன்றாவது மொழியாக உள்ளது. தமிழ் மொழியை பொறுத்தவரையில் உலகத்தின் பழமையான மொழி. எத்தனை மொழிகளை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களோ; அவ்வளவு நல்லது. சின்ன விஷயங்களை சரிசெய்து, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் தான் தமிழக பாஜக ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 வருடங்களாக, என்னால் முடிந்தது, கட்சியால் முடிந்தது மற்றும் கட்சி தலைவர்களால் முடிந்தது செய்து கொண்டு இருக்கிறோம்.
காமராஜர் மாதிரி இன்னொருவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியுமா என்றால் அது நிச்சயமாக கிடையாது. அதேபோல் என்.டி.ராமராவ் போல புகழ்பெற்ற அரசியல் தலைவர் உருவாக முடியுமா என்றால் அது நிச்சயமாக கிடையாது. இதனை தாண்டி புதிதாக வருபவர்கள் மற்றும் என்னை போன்றவர்கள் என்ன செய்ய போகிறோம் என்றால், அதுதான் சின்ன சின்ன மாற்றங்கள். நல்ல மனிதர்களை கொண்டு வர வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். படித்த நபர்கள் அரசியலுக்குள் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.