பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்
|பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை.
பாஜகவுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பா.ஜ.க.வுடன் தி.மு.க.தான் மறைமுக கூட்டணியில் உள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக ஒப்பந்தத்துடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. திருச்சி சிவா நடத்திய பார்ட்டி நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அமைச்சராக ஆனவுடனே உதயநிதி பிரதமரை எப்படி சந்திக்க முடிந்தது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரியை அழைத்தனர்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் நேற்று புறப்பட்டார்.
முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்துள்ளார். ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். கடந்த 2011 முதல் 2021 வரை மிக சிறந்த ஆட்சியை அ.தி.மு.க தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பான ஆட்சி தந்தார்கள். அதன் பின் என் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தோம். அ.தி.மு.க ஆட்சியில் சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை, அதை திறக்க கூட திராணியற்ற முதல்-அமைச்சர் இன்றைய முதல்-அமைச்சர். திராணியற்ற அரசாங்கம் தான் திராவிட மாடல் ஆட்சியாக பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினுக்கு மக்கள் குறித்து கவலை இல்லை. குடும்ப உறுப்பினர்கள் குறித்து தான் கவலைப்படுகிறார். எனக்கு திறமை இல்லை என முதல்-அமைச்சர் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளரான எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் ஆனதற்கு திறமை தான் காரணம். ஆனால், ஸ்டாலின் கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான் முதல்-அமைச்சர் ஆனார். கருணாநிதியின் பேரன் என்கிற காரணத்தால் தான் உதயநிதி துணை முதல்-அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதாக தான் மக்கள் நினைப்பார்கள். கூட்டணி உடையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறுவதே அந்த கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தான். அதனால்தான் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது" என்று அவர் தெரிவித்திருந்தார்.