
நீலகிரி: தேயிலைத் தோட்ட பகுதிகளில் உலா வரும் காட்டு யானை - மக்கள் அச்சம்

காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைத்தோட்டம் ரேஞ்ச் எண்- 3, செம்பக்கொல்லியில் நேற்றுமுன்தினம் இரவு கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து அந்த காட்டுயானை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. பின்னர் அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளிக்கு செல்லும் சாலைக்கு வந்து வாகனங்களை மறித்து துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சேரம்பாடி, பிதிர்காடு வனத்துறையினர் விரைந்து வந்து யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்தநிலையில் நேற்று காலையும் செம்பக்கொல்லி அரசு தேயிலை தோட்டத்தில் கட்டை கொம்பன் யானை புகுந்தது. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.