
கோப்புப்படம்
நீலகிரி
நீலகிரி: மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டைகர்ஹில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (35 வயது). இவரது மனைவி அஞ்சலி மேரி (28 வயது). இவர்களது 2 வயது மகள் மிர்துளா. கடந்த 2 மாதத்திற்கு முன்பு கார்த்திக்கு சிங்காரா தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள பங்களா ஒன்றில் பராமரிப்பாளர் வேலை கிடைத்தது. இதனால் கார்த்தி தனது குடும்பத்துடன் அந்த பங்களாவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார்.
இந்த பங்களா முன்பு சிமெண்டால் ஆன தரைமட்ட மீன் தொட்டி ஒன்று உள்ளது. நேற்று காலையில் குழந்தை மிர்துளா, மீன் தொட்டி அருகே நின்று மீன்களுக்கு இரை போட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மிர்துளா மீன்தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தாள்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்தி உடனடியாக குழந்தையை மீட்டு குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.