புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
|புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக, வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி,
தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி மாவட்டம் கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களால் கன்னியாகுமரி தற்போது களைகட்டியுள்ளது. புத்தாண்டு விடுமுறையையொட்டி அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக, வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.