விருதுநகர்
அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள்.. விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
|அருப்புக்கோட்டை அருகே 350 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:-
விருதுநகர் மாவட்டத்திற்கு, சில திட்டங்கள் தேவை என்று நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை சொன்னார்கள். அதை ஏற்று, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி உற்பத்தி மற்றும் அச்சுத் தொழில் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்தவரை, மழையையும், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவே, இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கின்ற கண்மாய்களும், அணைக்கட்டுகளும், 17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
அதுமட்டுமல்ல, காரியாப்பட்டி வட்டத்தில், தெற்காற்றின் குறுக்கே 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை ஒன்றும் கட்டப்படும். அத்துடன், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கவுசிகா ஆறு, அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கின்ற கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் 41 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் இருக்கின்ற 22 கண்மாய்கள், 18 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அது புனரமைக்கப்படும். அதேபோல், காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் 23 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
அத்துடன் அந்த அணைப் பகுதிகளில், 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும்.
தொழிற்துறை
விருதுநகர் மாவட்டத்தில், எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது. அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில், இந்த புதிய சிப்காட் தொழில்வளாகம் அமைக்கப்படும். இதனால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை
சிவகாசி மாநகராட்சியில், 15 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
விருதுநகர் நகராட்சியில், 24 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
சாத்தூர் நகராட்சியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூங்கா மற்றும் சிறு பாலம் அமைக்கப்படும்.
ராஜபாளையம் நகராட்சியில், 13 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், கோடை நீர்த்தேக்கம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
அருப்புக்கோட்டை நகராட்சியில், 3 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பூங்காவும் அமைக்கப்படும்.
விருதுநகர் நகராட்சி எல்லைக்குள் வரக்கூடிய நெடுஞ்சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,
அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,
காரியாபட்டி நகரத்தின் எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
திருவில்லிபுத்தூரில், இருக்கின்ற ஆண்டாள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்பாட்டிற்காக, கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
சுற்றுலா துறை
வத்திராயிருப்புக்கு அருகே பிளவக்கல் அணைப் பகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சாஸ்தா கோவில் அருவி பகுதியில், 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.