"நெல்லை கொலை சம்பவம்... போலீசாரை பாராட்ட வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
|சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எந்த சம்பவமும் நடக்காமல் தடுக்க முடியாது. ஆனால் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 4 குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதி நபர்கள் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்திருக்கிறார்கள். இதனால் காவல்துறை நீங்கள் பாராட்ட வேண்டுமே தவிர, அங்கு சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். சம்பவம் நடந்த உடன் அதை தடுக்கக்கூடிய சக்தி தி.மு.க. ஆட்சிக்கு இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம். அதை பாரட்ட வேண்டும், ஆனால் பாராட்டுவதற்கு மனமில்லாமல் இங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து அதே பல்லவியை பாடிக்கொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் பதவிகளை கொடுப்பது பா.ஜ.க.தான். சமூக விரோதிகள், பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கின்றவர்களை பா.ஜ.க. சேர்த்து கொள்கிறது. வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை பா.ஜ.க. தங்கள் கட்சியில் சேர்த்துள்ளதை பலமுறை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.