தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும் - எச்.ராஜா
|கூட்டணி குறித்து பொது வெளியில் யாரும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ஜ.க. அமைப்பு தேர்தல் பணிகள் தொடர்பாகவும், உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வருகிற 2026 சட்டசபை தேர்தலை நோக்கிய பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், பிற கட்சிகளுடனான கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுந்தால் அதுகுறித்து பொது வெளியில் யாரும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று மேலிட பொறுப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. கிளைத் தேர்தலை வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, நகர, ஒன்றிய, மாவட்ட தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜனவரியில் மாநில தலைவர், தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் தமிழக அரசின் முழு தோல்வியை காட்டுகிறது. தற்போது, சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க உள்ளது வரவேற்கத்தக்கது. தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.