போதைப் பொருள் வழக்கு: கைதான துணை நடிகை கொடுத்த தகவல் - 4 பேர் கைது
|கைதான துணை நடிகை கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாசாலை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து துணை நடிகை எஸ்தருக்கு போதைப் பொருளை சப்ளை செய்த அவரது நண்பர் தாமஸ் 'இண்டர்நெட்' அழைப்பு மூலமாகவே பேசி இருப்பதால், போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. எனவே 'சைபர் கிரைம்' போலீசார் உதவியுடன் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் விசாரணைக்கு பின்னர், துணை நடிகை எஸ்தர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் துணை நடிகை எஸ்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.