நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
|நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா (21), துகாஸ் (29). ஆகிய இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், பள்ளிபாளையம் அருகே பாதரை டாஸ்மாக் மதுபான கடை அருகே இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, போலீஸ் விசாரணையில், முன்னா, துபாஸ் உள்பட நான்கு பேர் டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.