ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய இஸ்லாமிய பக்தர்
|ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு இஸ்லாமிய பக்தர் ஒருவர் வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
திருச்சி,
108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் பூலோக வைகுண்டம் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ரெங்கநாத கோவிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் என்பவர் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் நேற்று வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் ஜாகிர் உசேன் கூறுகையில், "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3,160 கேரட் மாணிக்கக்கல், 600 வைரக்கற்கள், தங்கம் மற்றும் மரகதக்கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒற்றை மாணிக்கக்கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்டது. இதனை செய்ய சுமார் 8 ஆண்டுகள் ஆனது. உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக்கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு. பிறப்பால் நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ரெங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்துள்ளேன்" என்று கூறினார்.