முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
|ஒரே நேரத்தில் 150 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ.15 கோடி செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பார்வையாளர்களை கவரும் விதமாக காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 25 நாட்களுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த ஆம்னி பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 150 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் கொண்டு வர அழுத்தம் கொண்டு வருகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.