கொளத்தூர் தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
|ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் 'முதல்வர் படைப்பகத்தை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் முதல்-அமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு "முதல்வர் படைப்பகம்" என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பகத்தில் வருகின்றவர்களுக்கு படிப்பதற்கென்று ஒரு தளமும், பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு ஒரு தளமும் என 3 தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம். மேலும், இதில் 3 கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்படுகின்றன. கலந்தாய்வு கூடங்களில் இரண்டில் தலா 4 பேரும், ஒன்றில் 6 பேரும் அமர்ந்து பணியாற்ற முடியும்.
கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாது என்றும், பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தை பகிரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்த அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. மேலும், பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளனர். இதன், 13-வது பேட்ச்சாக பயிற்சி முடித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி வழங்குகிறார்.