பறக்கும் ரெயில்: இன்று முதல் பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு
|சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் பறக்கும் ரெயில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்து வந்தனர். இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு பறக்கும் ரெயில் சேவை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை, மீண்டும் தொடங்கிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் ஏமாற்றத்துகுள்ளாகினர்.
இந்நிலையில் சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் இன்று முதல் (நவ.11) நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.