< Back
மாநில செய்திகள்
முட்டை பொரியலில் விஷம் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் - காதலை கைவிடாததால் ஆத்திரம்
மாநில செய்திகள்

முட்டை பொரியலில் விஷம் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் - காதலை கைவிடாததால் ஆத்திரம்

தினத்தந்தி
|
2 Feb 2025 11:22 AM IST

மகளின் காதலுக்கு தாய் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா(வயது 47). இந்த தம்பதியின் மகள் குறிஞ்சி(20). இவர், சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாய்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், காதலை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார். ஆனால் குறிஞ்சியோ அதை கேட்காமல் சாய்குமாருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததார். இதில் ஆத்திரமடைந்த மல்லிகா, பெற்ற மகளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி முட்டை பொரியலில் எலி மருந்தை கலந்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். இதையறியாத குறிஞ்சி அதனை சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு முட்டை பொரியலில் விஷம் கலந்து கொடுத்ததாக தனது மகளிடம் மல்லிகா கூறினார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து குறிஞ்சியை அவரது தந்தை மற்றும் அண்ணன் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து குறிஞ்சி அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால் பெற்ற மகளை தாயே கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்