தாய் யானை உயிரிழப்பு: யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சி
|கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் உயிரிழந்தது.
கோவை,
கோவையை அடுத்த தடாகம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலத்தில் ஒருமாதமே ஆன குட்டியானை கடந்த சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டது. அந்த குட்டியானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அப்போதுதான் அதன் தாய் யானை, அமர்ந்த நிலையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டம் இந்த குட்டி யானையை சேர்த்துக் கொள்ளவில்லை. உயிரிழந்த தாய் யானையுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் பொன்னூத்தம்மன் கோவில் அருகே நேற்று முகாமிட்டு இருந்தது. அப்போது அந்த கூட்டத்துடன் குட்டியானையை சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.
இதற்காக குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்ற வனத்துறையினர், அந்தகூட்டத்துடன் சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் இந்த குட்டி யானையை சேர்த்துக்கொள்ளவில்லை.தொடர்ந்து நேற்று மாலையில் மீண்டும் வனத்துறையினர் கூட்டத்துடன் சேர்க்க முயன்றனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இன்றும் யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை யானைகள் கூட்டம் குட்டி யானையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை எங்கு கொண்டு செல்வது என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தற்போது அந்த குட்டி யானை நலமுடன் சுறுசுறுப்பாக உள்ளது என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.